
மலேசியாவில் நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் தொற்றில்லாத நோய் அதிகரித்து வருவதால், சர்க்கரை உட்கொள்வதை பயனீட்டாளர்கள் குறைத்து வருவதாக தேசிய பயனீட்டாளர் புகார் மையத்தின் உயர்நிலை நிர்வாகி சாரல் ஜேம்ஸ் கூறினார்.
இந்த நிலையில் கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடி ஒன்றில், உடல் ஆரோக்கியத்தை தரும் என கூறப்படும் ஒரு செரிமான பானத்தின் விலை பயனீட்டாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பானத்தின் வழக்கமான விலை வெ 5.30 தான். ஆனால் இதன் சர்க்கரை குறைவான பானம் வெ 5.70 விற்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் பயனீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இந்த பானத்தை வாங்கிச் செல்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சர்க்கரை குறைவான பொருட்களை பயனீட்டாளர்கள் உட்கொள்வதை நாம் வரவேற்கிறோம். ஆனால் இவை ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன? என அவர் கேள்வி எழுப்பினார்.
சில தரப்பினருக்கு 40 காசு விலை வித்தியாசம் ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் இதை தூர நோக்கில் பார்க்கையில், பாதிப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டில் 39 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனையை இது நோக்கம் போது, ஆரோக்கியமான உணவு அவசியமாகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கு சர்க்கரை குறைவான பொருட்கள் உட்கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இது அன்றாட தேவையாகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த 40 காசு வித்தியாசம் ஒரு மாதத்திற்கு வெ 10-20 ஆக அல்லது ஒரு ஆண்டிற்கு வெ 100-200 ஆக அதிகரிக்கிறது. பி40 வறுமைக் கோட்டில் உள்ள தரப்பினருக்கு இது சிறிய தொகை அல்ல என அவர் சாடினார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் ஆரோக்கியமான உணவிற்கு அதிக கட்டணத்தை செலுத்துவது நியாயமற்ற ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளை வடிமமைக்கும் தரப்பினர், இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆரோக்கியம் என்பது விலை அதிகம் என்று அர்த்தமாகாது. இந்த விவகாரத்தில் வியாபாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சக்கரைக்கு மாற்றான பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கை அரசாங்கம் அமலாக்கம் செய்ய வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.