நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு சுத்தமானதாக மற்றும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என மலேசிய பயனீட்டாளர்கள் தரநிலை சங்கத்தின் பொதுச் செயலாளர் சாரல் ஜேம்ஸ் மணியம் கூறினார்.
சுத்தமற்ற இடத்தில் தயாரிக்கப்படும் உணவு, பழைய உணவு வகைகளை உட்கொள்வதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று ஜூன் 7 அனைத்துலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார். மலேசிய சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் உணவு தர மற்றும் பாதுகாப்பு பிரிவு இந்த விவகாரம் குறித்து விழிப்புடன் இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாம் உட்கொள்ளும் உணவினால் வயிற்று கோளாறு ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய இந்த பிரிவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இரவு சந்தை, உணவகங்கள் மற்றும் பள்ளிகளில் சிற்றுண்டி சாலைகளில் விற்கப்படும் உணவு சுத்தமானதா மற்றும் பாதுகாப்பானதா என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிலையை அடிப்படையாக க் கொண்டது.
உணவு பாதுகாப்பு மேலாண்மையில் முறையில் ISO 22000 தரநிலையை நாம் கொண்டிருப்பது அவசியம் என அவர் சுட்டிக் காட்டினார். நாம் உட்கொள்ளும் உணவு ஒரு பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. நமது உணவு பாதுகாப்பானது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பல புகார்கள் கிடைத்து வருகின்றன. சமையலறையில் எலிகள் நடமாட்டத்தின் காரணமாக பல புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளது நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.
சுகாதாரத்தை பேணுவதில் தர நிலையை பின்பற்றாததால் தான் இது போன்ற பிரச்சனைகள் உருவெடுத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.